சென்னை: டெல்டா மாவட்டங்களை தவிர்த்து, பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய பணத்தை தராமல், ரூ.810 கோடி நிலுவை வைக்கப்பட்டது. இந்த தொகையை பெற்று தர வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சு நடத்த, வேளாண் துறை இயக்குநர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில் ‘கொள்முதல் செய்த நெல்லுக்கு, அடுத்த 15 நாட்களில் பணப்பட்டுவாடா செய்யப்படும்’ என, உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.810 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல்லுக்கான பணத்தை, 48 மணி நேரத்திற்குள் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் நெல் கொள்முதலுக்கான பணம் உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படும்’ என, தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் மற்றும் தமிழக நெல், அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு இணைய கிளை மேலாளர் பீஜாய் ஜான், சம்மேளன மேலாண் இயக்குநர் அம்ருதீன் ஷேக் தாவுத் விடுத்த அறிக்கை: இந்தாண்டு, டெல்டா அல்லாத மாவட்டங்களில், 40,490 விவசாயிகளிடம் இருந்து, 3.31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, ரூ.810 கோடியாகும். இந்த தொகை, விவசாயிகள் வங்கி கணக்கில் முழுவதும் வரவு வைக்கப்பட்டு, ஒன்றிய – மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பணம் கொடுக்காமல் போனதற்கு, ஒன்றிய தொகுப்பில் இருந்து நிதி வழங்கப்படாதது தான் காரணம். இனி வரும் காலங்களில், கொள்முதல் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் பணம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.