சென்னை: தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (டிஎன்பிஆர்பிஎப்) மேலாண் இயக்குனர் அம்ருதீன் ஷேக் தாவுத் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு நெல் கொள்முதலை உயர்த்தும் பொருட்டு மத்திய உணவுத்துறைக்கு கீழ் செயல்படும் அரசு நிறுவனமான என்சிசிஎப் நுகர்வோர் கூட்டுறவு இணையம் காவேரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்து அதை அரிசியாக அரவை செய்து பொது விநியோக திட்டத்திற்கு வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்று என்சிசிஎப் நிறுவனத்தின் இடை நிலை சார்பு நிறுவனமாக டிஎன்பிஆர்பிஎப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு காவேரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் 40490 விவசாயிகளிடமிருந்து 331178 எம்டிஎஸ் நெல் கொள்முதல் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.810 கோடியாகும். இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் முழுவதுமாக வரவு வைக்கப்பட்டு ஒன்றிய, மாநில அரசுகளின் இணையத்தள பதிவேட்டில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஎன்சிஎஸ்சி ரூ.420 கோடியும், டிஎன்பிஆர்பிஎப் நிறுவனமும் ரூ.390 கோடியும் வழங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைத்து பணத்தை உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்து நலனை காத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கும், மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.