தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண் பெருமக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக வேளாண்மைக்கென்று பிரத்யேகமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு, அதில் பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக் கிறது. இதில் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு, சிவன் சம்பா போன்ற மருத்துவக்குணம் கொண்ட நெல்ரகங்களைப் பயிரிட நிதி உதவி, நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்க ரூ500 கோடி என பல விதங்களில் நெல் சாகுபடிக்காக பல்வேறு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2023 – 2024 காரிப் பருவத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடம் இருந்து 33,24,166 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லுக்கு இணையாக ரூ.7,277.77 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-2025 காரிப் பருவத்திற்கு சன்ன ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320 உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.130 சேர்த்து சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்ற விலையிலும், பொது ரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2300 உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.105 சேர்த்து பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையலாம் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.