Wednesday, February 21, 2024
Home » நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் குளத்தை பதிவு செய்த அதிகாரிகள்: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தற்போது அம்பலத்துக்கு வந்தது

நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் குளத்தை பதிவு செய்த அதிகாரிகள்: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தற்போது அம்பலத்துக்கு வந்தது

by Karthik Yash

நெல்லை: நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி விசாரணை அதிகாரி அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். நெல்லையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகரத்தை ஒட்டிய பகுதி கிருஷ்ணாபுரம். நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ளது. இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது. தற்போது வீடுகள், சிறிய தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும்.

இதன் அருகில்தான் நெல்லை, தூத்துக்குடி நெடுஞ்சாலையும் உள்ளது. இதனால் தற்போது இந்தப் பகுதியில் நிலத்திற்கு கடுமையான தேவை அதிகமாகியுள்ளது. கிருஷ்ணாபுரத்துக்கு அருகில் பாப்பா குளம், சிவலார் குளம் ஆகிய 2 குளங்கள் உள்ளன. ஒவ்வொரு குளமும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த 2 குளத்தையும் நெல்லையைச் சேர்ந்த ரெங்க நாச்சியார், என்பவருக்கு முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பதிவுத்துறை டிஐஜி செந்தமிழ்செல்வன், விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நெல்லையில் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலக எல்லையில்தான் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள பாப்பா குளம், சிவலார் குளம் வருகிறது. ஒவ்வொரு குளமும் தலா 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தப் பகுதியில் தற்போதைய மதிப்பு சென்ட் 2 லட்சம் ரூபாய். அதன்படி பார்த்தால் 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.400 கோடியாகும். இந்த நிலத்தை நூதனமான முறையில் ஒரு கும்பல் இதை அபகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டை மகராஜநகர், முனிசபல் காலனி வசிப்பவர் ரெங்கநாச்சியார். இவரது சகோதரர் பட்சிராஜன். இவர்களது தந்தை வெங்கட வரதாச்சாரி என்ற ராஜன்.

வெங்கட வரதாச்சாரி இறந்து விட்டதால், தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக இருவரும் பதிவுத்துறைக்கான லோக் அதாலத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அப்பா பெயரிலான சொத்துக்கள் தங்களுக்குத்தான் வேண்டும் என்று இருவரும் வழக்கு நடத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து லோக் அதாலத் கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகி விட்டோம். அதன்படி, குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்களை ரெங்கநாச்சியாருக்கு கொடுக்க சம்மதிப்பாக பட்சிராஜன் லோக் அதாலத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தங்களது சொத்து சர்வே எண்ணுடன் சேர்த்து பாப்பாகுளம், சிவலார் குளத்தின் சர்வே எண்ணையும் இணைத்து கூறியுள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட லோக் அதாலத், அந்த மனுவின் அடிப்படையில், குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்கள் அனைத்தும் ரெங்கநாச்சியாருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் 2 குளத்தின் சர்வே எண்ணும் சேர்க்கப்பட்டிருந்தது. லோக் அதாலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஆவணங்களை வைத்து முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட சொத்துக்களை தன் பெயரில் பதிவு செய்து தரும்படி ரெங்கநாச்சியார், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி விண்ணப்பம் செய்தார். அந்த ஆவணத்தை சார்பதிவாளராக இருந்த செ.குமரேசன், பதிவு செய்யாமல் நிலுவையில் (நிலுவை எண்154/2016) வைத்து விட்டார்.

ஒரு ஆவணத்தை நிலுவையில் வைத்திருந்தால் சரியான ஆவணங்கள் இல்லை என்று பொருள். ஆவணங்கள் இல்லாவிட்டால்தான் நிலுவையில் வைத்திருப்பார்கள். பின்னர் அதே மாதத்தில் 29ம் தேதி ஆவணங்களை சரிபார்த்து விட்டு, சார் பதிவாளர் குமரேசன், ஆவணங்களை பதிவு செய்து(பதிவு செய்த எண் 2572/2016) கொடுத்துள்ளார். அதில் சர்வே எண் 244 (பாப்பாகுளம்), 229 (சிவலார்குளம்) என்பதையும் எந்த முன் ஆவணமும் இல்லாமல், வில்லங்கச்சான்று பார்க்காமல் மேலும், சர்வே எண்ணை சரிபார்க்காமல் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

மேலும், சர்வே எண்244, 229 ஆகியவை 2017ம் ஆண்டு அதாவது பத்திரப்பதிவு செய்த ஓராண்டுக்குப் பின்னரும் அரசு ஆவணத்தில், இந்த இரு சர்வே எண்களும் அரசு புறம்போக்கு நிலம் என்று உள்ளது. இதனால் சார்பதிவாளர் குமரேசன், மோசடி நபர்களுக்கு உடந்தையாக இருந்து அரசு குளத்தை, ரெங்கநாச்சியாரின் பெயருக்கு பதிவு செய்து கொடுத்துள்ளது, டிஐஜி செந்தமிழ்செல்வன் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லையில் ரூ.400 கோடி மதிப்புள்ள குளத்தை சார்பதிவாளர் உடந்தையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதிவை ரத்து செய்ய வேண்டும், பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சதியில் ஈடுபட்டவர்கள், அரசு சொத்தை அபகரித்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுத்து போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அவர் இந்த அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.400 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரெங்கநாச்சியாரும் அவரது சகோதரரும் குளத்தை அபகரிப்பதற்காக வேண்டும் என்றே தங்கள் குடும்பத்துக்குள் சொத்து பிரச்னை இருப்பதுபோல லோக் அதாலத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதும், பின்னர் லோக் அதாலத்துக்கு வெளியே சமசரமாகிக் கொண்டோம் என்று ஒரு பொய்யான ஆவணத்தை தயாரித்து, அதில் குளத்தின் சர்வே எண்ணையும் சேர்த்து தாக்கல் செய்திருப்பதும், பின்னர் லோக் அதலாத்தின் உத்தரவை வைத்து போலியாக பதிவு செய்திருப்பதும் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் துணிச்சலாக இந்த முறைகேட்டில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eighteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi