*6 மாதத்தில் 50 ஆயிரம் டன் வரத்து
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வெளிமாநிலங்களிலிருந்து, கடந்த 6 மாதத்தில் 50ஆயிரம் டன் பச்சரிசி மூட்டைகள் வந்துள்ளன. நேற்று மட்டும் 2,650 டன் பச்சரிசி தர்மபுரி வந்து இறங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, வரட்டாறு, நாகாவதி அணை, தும்பலஅள்ளி அணை, கேசர்குழி அணை, ஈச்சம்பாடி அணைக்கட்டு ஆகிய 8 அணைகள் உள்ளன.
மழைக்காலத்தில், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழைநீர் அணைகளுக்கு வருகிறது. இந்த அணைகளின் நீரை கொண்டு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் 2 போகத்திற்கு சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் விளையும் நெல், மாவட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் இந்திய உணவு கழகம் மூலம், வெளிமாநிலம் மற்றும் டெல்டா மாவட்டத்தில் இருந்து பச்சரிசி மற்றும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள் பச்சரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். கடந்த 6 மாதத்தில் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டத்திற்கு 50ஆயிரம் டன் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, ஆந்திரா மாநிலத்தில் இருந்து 40 வேகனில் 2,650 டன் பச்சரிசி லோடு சரக்கு ரயிலில், தர்மபுரி ரயில்நிலையத்திற்கு வந்தது. அந்த அரிசி மூட்டைகள், நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது.
பின்னர் இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அரவை ஆலைகளில் அரைத்து, பச்சரிசியாக தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
தற்போது புழுங்கல் அரிசியை அரைக்கும் வசதி வந்துள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, கடத்தூர், அரூர் ஆகிய இடங்களில் குடோன்கள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்திற்கு மாதம் 25 ஆயிரம் டன் பச்சரிசி தேவைப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் பச்சரிசி மற்றும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் பச்சரிசி மதிய உணவுக்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் சென்னையில் ஒரு பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் அதிகம் நபர்கள் பச்சரியை உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ரேஷன் கடைகளில் பச்சரிசி வழங்கப்படுகிறது. பச்சரிசி வெளிமாநிலங்களிலிருந்து வருகிறது. இது தவிர, தர்மபுரி மாவட்டத்திலும் தனியார் அரவை ஆலைகள் மூலம் நெல் மணிகளை அரைத்து பச்சரிசியை பொது விநியோக திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி விநியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு இதுவரை 50ஆயிரம் டன் பச்சரிசி, தர்மபுரி மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளது,’ என்றனர்.