*சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி
நெல்லை : நெல்லை மாநகரில் நேற்று பிற்பகலில் மழை கொட்டி தீர்த்தது. மழை தண்ணீர் தேக்கம் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நெல்லை மாநகரில் கடந்த ஒரு வாரமாக மழை தென்படுகிறது. நேற்று காலையில் வெயில் லேசாக தென்பட்டாலும், பிற்பகலில் மீண்டும் கருமேகங்கள் கூடி நல்ல மழை பெய்தது. பிற்பகல் 1.30 மணிக்கு ெதாடங்கிய மழை சுமார் ஒருமணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் வண்ணார்பேட்டை புறவழிச்சாலைகள், நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள் மற்றும் பொருட்களை வாங்கி செல்ல நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் கடும் கூட்டம் காணப்பட்டது. மழை காரணமாக வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன. வண்ணார்பேட்டை ரவுண்டானாவை சுற்றிலும் இதனால் போக்குவரத்து ெநருக்கடியும் ஏற்பட்டது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் மேம்பால இறக்கத்தில் மழை நேரத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் மிதந்து சென்றன. பொதுமக்கள் முட்டளவு தண்ணீரில் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.நெல்லை டவுனில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளில் பள்ளம் எங்கே உள்ளது என்பது தெரியாத அளவுக்கு சாலைகள் தண்ணீர் மயமாக காட்சியளித்தன. இதனால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் விழுந்து விடாமல் வாகனங்களை இயக்கி சென்றனர். மேலப்பாளையம் சாலைகளிலும் நேற்றைய மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.