திருமலை: சென்னை அடுத்த திருத்தணியை சேர்ந்தவர் நரேஷ் (32). இவர் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் பெற்றோர் வேண்டுதலின்படி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதிக்கு நேற்றுமுன்தினம் வந்தார்.
அனைவரும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து சென்றபோது 2,350வது படியை அடைந்த நரேஷூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மனைவி கண் முன் மயங்கி விழுந்தார். உடனடியாக நரேஷை திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் நரேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து திருமலை 2வது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.