சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் 2013 – 2015ம் ஆண்டு வரை நடந்த உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 2013 – 2015ம் காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உதவிப் பேராசிரியர்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், பதவி ரத்து செய்யப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்து 2022 நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களை ஆய்வு செய்ததில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை மறுக்க முடியாது என்றும், தகுதி இல்லாதவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
பொதுவாக நியமனங்களை பொறுத்தவரை இது சம்பந்தமாக அறக்கட்டளை நிர்வாகியும், உயர்கல்வித்துறை செயலாளரும் அளித்த அறிக்கையில் குறைகள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுவதால், அதன் அடிப்படையில் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க முடியாது என்பதால் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை நியமித்து உத்தரவிட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீதா ஞானராணி அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
254 பேரும் தகுதி பெற்றவர்களா? என செப்டம்பர் 27ம் தேதி, மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 254 உதவி பேராசிரியர்களும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 9 வரை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.