சென்னை: பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் முதல்வர் அறை முன்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட ‘ரூட் தல’ பிரச்னையால் சக மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள முதல்வர் அறை முன்பு நேற்று முன்தினம் பூந்தமல்லியில் இருந்து வரும் 53 ரூட் மாணவர்களுக்கும், பாரிமுனையில் இருந்து கோயம்பேடு செல்லும் 15ஜி ரூட் மாணவர்களுக்கும் இடையே யார் ரூட் தல என்ற பிரச்னை ஏற்பட்டது.
அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்த பீட்டர் (21) என்ற மாணவன் பச்சையப்பன் கல்லூரியில், எங்கள் ரூட் தான் தல என்று மற்ற ரூட் மாணவர்கள் எங்களுக்கு கீழ்தான் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிஏ 3ம் ஆண்டு படித்து வரும் பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் முதல்வர் அறை முன்பே கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது மாணவர்களில் ஒருவர் வைத்திருந்த அரிவாளால் பீட்டர் என்ற மாணவனை தலையில் ஓங்கி வெட்டியுள்ளனர். இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் பீட்டரை சக மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின்படி போலீசார் நேற்று காலை மோதல் நடந்த கல்லூரி முதல்வர் அறையின் அருகே சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நேரடியாக விசாரணை நடத்தினார். இனி இதுபோன்ற சம்பவங்கள் கல்லூரி வளாகத்தில் நடக்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து மோதல் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சக மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பச்சையப்பன் கல்லூரியில் தற்போது பருவத்தேர்வு நடந்து வரும் நிலையில் ரூட் தல பிரச்னையில் மாணவர்கள் அரிவாளால் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.