புனே: உலக சுகாதார அமைப்பின் சுயாதீன ஆலோசனைக் குழு மலேரியா கொள்கை ஆலோசனைக் குழு இணைந்து, ‘ஆர்21/மேட்ரிக்-எம்’ என்ற மலேரியா தடுப்பூசியை பயன்படுத்துதல் குறித்து ஆய்வு நடந்தியது. இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (ஜென்னர் நிறுவனம்) மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் (புனே) இணைந்து உருவாக்கியது. இந்நிலையில் இந்த மலேரியா தடுப்பூசியின், பாதுகாப்பு, தரம், செயல்திறன் சோதனைகள் முடிக்கப்பட்டதால் அவற்றை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘பருவகாலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் ஒன்றான மலேரியா நோயை தடுக்கும் விதிமாக தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ சோதனை தரவுகளின் அடிப்படையில், எங்களது கூட்டு தயாரிப்பான ‘ஆர்21/மேட்ரிக்-எம்’ என்ற மலேரியா தடுப்பூசியை உலக சுகாதர நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்த தடுப்பூசியானது குழந்தைகளுக்கு பயன்படுத்த முடியும்.
மலேரியாவைத் தடுக்க உலகின் இரண்டாவது தடுப்பூசியாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்த மலேரியா தடுப்பூசியை கென்யா, கானா, நைஜீரியா, புர்கினா பாசோ ஆகிய நாடுகள் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசியானது மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.