Friday, April 19, 2024
Home » சொந்தக் கட்சியையும் கூட்டணி கட்சிகளையும் வறுத்தெடுக்கும் தாமரை துணை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்தக் கட்சியையும் கூட்டணி கட்சிகளையும் வறுத்தெடுக்கும் தாமரை துணை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Arun Kumar

‘‘க டலோர தொகுதியில் ஆதரவாளருக்கு தான் எம்பி சீட் என தலைமையிடத்தில் கறராக தெரிவித்தாராமே மாஜி அமைச்சர்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் இலை கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் கடலோரம், மயில் நடனமாடிய மாவட்டம், நெற்களஞ்சியம் ஆகிய எம்பி தொகுதிகளில் இலை கட்சி சார்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளர்கள் தன்னுடைய ஆதரவாளர்களாக தான் இருக்க வேண்டும் என்பதில் மாஜி அமைச்சர் கர்ம வீரர் உறுதியாக இருந்து வருகிறார். இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவர், கடலோர மாவட்ட தொகுதியில் நிற்பதற்காக தனக்கு சீட் வேண்டும் என தலைமை கதவை நேரிடையாக தட்டி உள்ளார். இந்த தகவல் தனது ஆதரவாளர்கள் மூலமாக கர்ம வீரருக்கு தெரியவந்ததாம்… இதில் உச்சகட்டத்துக்கு சென்ற கர்ம வீரர், கடலோர மாவட்ட தொகுதியில் தனது ஆதரவாளருக்கு தான் எம்பி சீட் கொடுக்க வேண்டும் என சேலத்துக்காரரிடம் போனில் கறராக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தெரிந்து கடும் அப்செட்டில் இருந்து வரும் தனது ஆதரவாளரிடம், கடலோர மாவட்டத்தில் நீங்கள் தான் வேட்பாளர். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது என கர்மவீரர் தெரிவித்து விட்டாராம்’’…கூட்டணிக்காரங்களை தாமரை அழைக்காத ரகசியம் இது தானாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அந்த தலைவரு எரிஞ்சி எரிஞ்சி விழறாராமே..’’ ‘‘தாமரை கட்சியின் மாநில துணைத்தலைவராக இருக்கும் மாஜி எம்பி, சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்கும் போது ரொம்பவும் டென்ஷன் ஆகிறாராம். குறிப்பாக எதிரணியில் இருக்கும் தலைவர்களை ஒருமையில் பேசுவதை ஒரு பாணியாகவே மாத்திக்கிட்டு இருக்காராம். இது அவரது சொந்தக்கட்சிகாரர்களை கூட முகம் சுழிக்க வைக்குதாம். இது ஒருபுறமிருக்க கூட்டணி கட்சிக்காரங்களையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்றாராம். நாட்டிலேயே பெரியகட்சி எங்க கட்சி தான். எங்க கட்சிக்கு பக்கத்தில் நிக்க கூட சிறிய கட்சிகளுக்கு தகுதியில்லை. இரண்டாயிரத்து நாற்பத்து ஏழுவரைக்கும் அதிகாரம் செய்வதுதான் எங்க எய்ம். குறிப்பா கூட்டணி கட்சிகளுக்கு எங்க பவரை காட்ட வேண்டியது ரொம்ப முக்கியம். அப்புறம் முக்கியமான ஒரு விஷயம். பிரதமர் பங்கேற்கும் எலக்க்ஷன் பிரசாரத்திற்கு கூட, நாங்க கூட்டணி கட்சிகளை கூப்பிட மாட்டோம். ஏன் தெரியுமா? அவங்க கூட்டத்துக்கு வருவாங்க. ஆனால் கூட்டத்தில் இருந்தவங்க எல்லாம் அவுங்க கட்சி ஆளுங்கதான்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அதனாலதான் எங்க கட்சிகாரங்க மட்டும் எப்படி கூடுறாங்கன்னு காட்டியாகணும். அதனால தான் பிரதமர் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு அவுங்கள கூப்பிடல என்று விளக்கம் வேற அளிச்சிருக்காராம். இப்படி மாங்கனி மாவட்டத்தில் துணை தலைவரு சீறியது கூட்டணியில் சேர்ந்துள்ள குக்கர்கட்சி, தேனிக்காரரின் ஆதரவாளர்கள், சைக்கிள்காரங்க என்று எல்லோருக்கும் செம கடுப்பை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலுக்கு எல்லாவித கோல்மால் வேலைகளிலும் ஈடுபடறாங்க போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க மெடல் மாவட்டத்தில் தாமரை கட்சியினர் அனைத்து விதமான டகால்டி வேலைகளிலும் களமிறங்கிக் கலக்க ஆரம்பித்தது விட்டார்களாம். இங்குள்ள அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர், ‘இலவச காஸ் வாங்கித் தர்றோம். இலவசமாக வீடு கட்டித் தர்றோம். ேலான் வேணும்னா சொல்லுங்க… ஏற்பாடு செய்றோம்’ என அள்ளி விட்டு வருகிறாராம். இதெல்லாம் அதுவா நடக்குதே… பின்ன ஏன் வாக்குறுதியை அள்ளி விடுது இந்தம்மா என பொதுமக்களே எரிச்சல் அடைகின்றனராம்… மாவட்டத்தில் ஏற்கனவே எம்பி தொகுதிக்கு டாக்டர் ஒருவர், கட்சியின் முக்கிய நிர்வாகி உட்பட 3 பேர் தங்களுக்குத்தான் சீட் என காத்திருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தனது கட்சியை, தாமரை கட்சியோடு இணைத்தவரின் இணையானவருக்கு சீட் தருவதற்கு தாமரைக்கட்சி முடிவெடுத்து விட்டது. ஏற்கனவே, நடந்த உள்குத்து பிரச்னையால்தான் சீட் மாற்றம் நிகழ்ந்ததாம். ஆனால், பிரச்னை வேறு ரூபத்தில் திரும்புகிறது. ‘கட்சியை இணைச்சுட்டார்னா அவர் எப்படி கூட்டணி ஆவார்? நம்ம கட்சிதானே..? ஏற்கனவே நாங்க சீட் கேட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கோம். இதுல எப்படி திடீர்னு கட்சிக்குள்ளே வந்தவருக்கு சீட் தருவீங்க என மீண்டும் பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. இதனால என்ன செய்வது என புரியாமல் மாநில தலைமை மண்டை காய்ந்து வருகிறதாம்… வாங்குற வாக்குகளே கொஞ்சம்தான் தேறும்… இதுல 4 பார்ட்டா பிரிஞ்சால் என்னதான் வரும்…? முடியலை என தாமரைக்கட்சி மெடல் மாவட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சிக்காரங்க கோஷ்டி மோதல் வீதிக்கு வந்துருச்சே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் நடக்குற ஊர்ல சமீபத்தில் இலைக்கட்சிக்காரங்க சங்கிலி போராட்டம் நடத்துனாங்க. அதுல, ஒற்றுமையா இணைஞ்சி சங்கிலி போல கட்சிக்காரங்க நிற்பாங்கனு பார்த்தா, அறுந்துபோன சங்கிலி மாதிரி கோஷ்டி, கோஷ்டியா பிரிஞ்சு நின்னுருக்காங்க. அதுக்கு காரணம், மாவட்ட பொறுப்புல இருக்கிற மாஜி மீசை மந்திரி மீதான அதிருப்திதானாம். இவரு, மாவட்ட பொறுப்புக்கு வந்ததுல இருந்தே, கட்சி நிர்வாகிகளை மதிக்கிறதில்லையாம். தேனிக்காரர் ஆதரவா இருந்தப்ப யாரெல்லாம் தன்னோட இருந்தாங்களோ அவங்களை மட்டும்தான் இப்போதும் கூட வச்சிருக்காறாம். அதனால, சேலத்துக்காரர நம்பியிருக்கிறவங்க எல்லாம் கொதிச்சிட்டு இருக்காங்க. அந்த வெறுப்புலத்தான், மாஜி மாவட்டமான திருப்பதி பேரை அடைமொழியா வச்சிருக்கிறவரு தன்னோட ஆதரவாளர்களோடு தனி கோஷ்டியா போராட்டத்துல கலந்துக்கிட்டாராம். அதோடு, மாவட்ட பொறுப்புல இருந்து மீசைக்காரர தூக்குறதுக்கு ஆதரவு திரட்டிட்டு இருக்கிறாராம். இப்படி கிரிவலம் மாவட்டத்துல இலை கட்சி கோஷ்டி மோதல் வீதிக்கு வந்திருக்குது. இதுல வர்ற எலக்‌ஷன்ல நின்னு.. ஜெயிச்சு.. ம்ம்ம்னு கட்சிக்காரங்க புலம்பத்தொடங்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi