Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொப்பூர் கணவாயில் மேம்பால பணிக்கு வனத்துறை தடையில்லா சான்று தாமதம்: விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

ஒன்றிய அரசு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க ரூ775 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சாலை அமைக்க, மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த திலிப் பில்கான் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

தர்மபுரி: தொப்பூர் கணவாயில், ரூ775 கோடி மதிப்பீட்டில் 6 வழி மேம்பால சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறையின் சார்பில் தடையில்லா சான்று வழங்குவதில் தாமதமாகி வருகிறது. தடையில்லா சான்று கிடைத்தவுடன், பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்ட எல்லையில், மலைகளின் நடுவே அமைந்துள்ள தொப்பூர் கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண்-44 செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும் மலைகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாய் 3.5 கி.மீ தூரம் செல்கிறது. இக்கணவாய் பகுதியில் வாரத்திற்கு சராசரியாக 3 விபத்துக்கள் நடக்கிறது. பாறைகளால் சூழ்ந்த இந்த கணவாய் இறக்கம், மேடு நிறைந்த பகுதியாக உள்ளது.

அதிவேகம், அதிக பாரம், டிரைவருக்கு போதிய தூக்கம் இல்லாமை, போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், டீசல் சேமிக்க கியரில் ஓட்டாமல் இல்லாமல் நியூட்ரலில் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக சர்வேயில் தெரியவந்தது. விபத்துகளை கட்டுப்படுத்த, மாற்றுவழியில் நேரான சாலை அமைப்பதே நிரந்தர தீர்வு என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஒன்றிய அரசு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க ரூ775 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சாலை அமைக்க, மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த திலிப் பில்கான் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதற்காக நிலம் எடுக்க சர்வே பணிகள் முடிந்தது. தற்போது பில்லர் அமைக்கும் இடங்களில் மண் பரிசோதனை நடக்கிறது. இந்நிலையில், தர்மபுரி எம்பி ஆ.மணி, ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவிற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில், தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்துவதற்கான எலிவேட்டட் காரிடாரின் பணிக்கான ஒப்பந்தம், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 30ம்தேதி கையெழுத்தானது. தொப்பூர் கணவாய் பகுதியில் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள், அதாவது நிலம் கையகப்படுத்துதல், 6வழி மேம்பால சாலை அமைப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் வன அனுமதி ஆகியவை, மாநில அரசாங்கத்துடன் செயல்பாட்டில் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க ரூ775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணவாய் மலைப்பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

கட்டமேட்டில் இருந்து போலீஸ் குடியிருப்பு வரை ஒரு தொகுப்பும், போலீஸ் குடியிருப்பு முதல் ரயில்வே இரட்டை பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் சாலை மற்றொரு தொகுப்பாகவும் அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 5 கிலோ மீட்டரும், சேலம் மாவட்டத்தில் 1.6 கிலோ மீட்டர் என மொத்தம் 6.6 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்படுகிறது. தொப்பூர் கிராமத்திற்குள் செல்லவும், மேச்சேரி சாலையில் செல்லவும் ரவுண்டனா சாலை அமைக்கப்படுகிறது. தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் இரட்டைபாலம் அருகே, பூகோள அமைப்பில் பள்ளம் அதிகமாக உள்ளதால், இந்த இடத்தில் சாலைக்காக கணவாயில் 150 அடியில் பில்லர் அமைக்கப்படுகிறது. மேலும், 150 அடி உயரத்தில் இருந்து 30 அடி உயரம் வரை, 90க்கும் மேற்பட்ட பில்லர்கள் அமைக்கப்படுகிறது. 2 இடங்களில் ரவுண்டனா சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான மண் பரிசோதனை நிறைவடைந்தது. வனத்துறை சார்பில் தடையில்லா சான்று வழங்குவதற்காக காத்திருக்கிறோம். தடையில்லா சான்று கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.