* வாகன நெரிசலால் மக்கள் அவதி
* ரிங் ரோட்டில் விதி மீறல் அதிகரிப்பு
ஓசூர் : மேம்பாலம் பழுதால், ஓசூர் மாநகரில் தினசரி போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. வாகன நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ரிங் ரோட்டில் விதி மீறல் அதிகரித்துள்ள நிலையில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரின் மைய பகுதியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பஸ் நிலையம் எதிரிலேயே உள்ளதால், தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில அரசுகளுக்கு சொந்தமான ஆயிரம் பஸ்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில், அதிக எடை கொண்ட வாகனங்கள் சென்று வருவதால் பாட் பேரிங்(பானை வடிவ பேரிங்) உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மேம்பாலம் ஒரு பக்கமாக சுமார் அரை அடி தொலைவு நகர்ந்துள்ளது.
இதனை சீரமைக்க அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, முதற்கட்டமாக மரக்கட்டைகள் அடுக்கி வைத்து இலகுரக வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதித்துள்ளனர். கனரக வாகனங்கள் கிருஷ்ணகிரி முதல் ஓசூர் வரையிலும், தர்மபுரி முதல் ஓசூர் வரையிலும் சுமார் 7 இடங்களில் பல்வேறு வழியாக திறப்பி விடப்பட்டு, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், ஓசூர் -பாகலூர் வழியாக மாலூர் செல்லும் மற்றொரு தேசிய நெடுஞ்சாலையிலும் ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முதல் கேசிசி நகர் வரையிலும், பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இயக்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள், தற்போது சிறிய சாலைகளில் திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவே, சீதாராம்மேடு முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை உள்வட்ட சாலை(ரிங் ரோடு) அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சாலை ஒரு சில இடங்களில் குறுகலாகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ரிங் ரோட்டின் இருபக்கமும் அமைந்துள்ள சானசந்திரம், முல்லை நகர், கோகுல் நகர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு, பழைய டெம்பிள் லேண்ட், அட்கோ, பாரதிதாசன் நகர், காந்தி நகர், சாந்தி நகர், முனீஸ்வரர் நகர், துவாரகா நகர், கொத்தூர், மத்தமக்காரம், என்டிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு தேவைகளுக்காகவும், மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் ரிங் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது. அவசர கதியில் செல்வோர், அணிவகுத்து நிற்கும் வாகனங்களுக்கு இடையே, தங்களது வாகனங்களை ஓட்டிக்கொண்டு புகுந்து செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகளிடையே வாக்குவாதம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
எனவே, சீதாராம்மேடு முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை சுமார் 8 கி.மீ., தொலைவிற்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தமிழகத்திலிருந்து பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவோர் வார இறுதி நாட்களில், ஓசூர் வழியாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். அந்த நாட்களில் ஓசூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை.
தற்போது, மேம்பாலம் பழுதால் தினசரி காலை- மாலை நேரங்களில், திரும்பிய திசை எல்லாம் வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால், மாணவ- மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்வதிலும், தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு செல்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.
போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால், உள்ளூர்வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில், சீரான போக்குவரத்துக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.