கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதியாகும்.கூடலூர் நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மக்கள் வசிப்பதற்கு முன்பாகவே அதிக அளவில் மக்கள் தொகையை கொண்ட ஒரு பேரூராட்சியாக ஓவேலி பேரூராட்சி திகழ்ந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் 1800களில் உருவான பெரிய தேயிலை மற்றும் காப்பி தோட்டங்கள்,பழமையான தேயிலை தொழிற் சாலைகள்,பல அரசு பள்ளிகள்,அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், அரசு சார் அலுவலகங்கள்,பழமையான அஞ்சலகம், பேரூராட்சி அலுவலகம் என அனைத்தும் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.
பெரிய சூண்டி பகுதியில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் பாண்டியாற்றின் கிளை ஆற்றில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 125 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரும்பு பாலம் இன்னமும் பலமான சான்றாக இருந்து வருகிறது.பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இன்றி பாலத்தில் தொடர்ந்து போக்குவரத்து இன்றும் நடைபெற்று வருகிறது.
ஒரு பேருந்து சொல்லும் அளவிற்கு உள்ள இந்த பாலம் 1899ம் ஆண்டில் சுமார் ரூ.17,000 செலவில் ஜேம்ஸ் அவுச்சர் லோனி என்ற ஆங்கிலேயரால் அப்பகுதியில் உள்ள காப்பி தேயிலை தோட்டங்களுக்கு தேவையான பொருட்கள்,தொழிற்சாலைகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓவேலி பேரூராட்சி பகுதியில் தேயிலை காப்பி தோட்டங்கள் உருவாகுவதற்கு முக்கியமான ஆங்கிலேயராக இருந்த ஜேம்ஸ் அவுச்சர் லோனி என்பவரது பெயரே மருவி ஓவேலி என்ற பெயரில் தற்போது அழைக்கப்பட்டும் அரசு அலுவலக குறிப்புகளில் குறிப்பிடப்பட்டும் வருகிறது. மழைக்காலத்தில் அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த ஆற்றின் மீது இரும்பினால் கட்டப்பட்ட இந்த பாலம் நடுப்பகுதியில் உள்ள பாறையின் மீது கற்களால் கட்டப்பட்ட தூணில் தாங்கி நிற்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் சேதம் இன்றி போக்குவரத்துக்கு உபயோகப்பட்டு வருவது இப்பகுதிக்கு வரும் புதிய நபர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.