சென்னை: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: 2024 சுதந்திர தின விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகருக்கு ரூ.50,000 ரொக்க பரிசும் சான்றிதழும் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000 ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல, 2025ம் ஆண்டுக்கும் சமூக சேவகர் விருதிற்கான விண்ணப்பங்கள், தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றும், சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இந்த விருதுக்கு awards.tn.gov.in இணையதளம் மூலம் 12.6.2025 வரை பெறப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். இணையதள விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரகத்தில், சிங்கார வேலனார் மாளிகை, 8வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 20ம் தேதி மாலை 4 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.