சென்னை: தேர்தல் வாக்குகளுக்காக எங்களை நாங்கள் மாற்றி கொள்ள மாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி பேசினார். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை மைதானத்தில் 35ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்துக்கொண்டு பேசியதாவது: சுற்றுச்சூழல் மாற்றம், காலநிலை பற்றி தொடர்ந்து பாமக பேசி வருகிறது. மாவட்டங்களில் உள்ள சின்ன சின்ன பிரச்சினைகளை பாமக தீர்த்து வருகிறது. தேர்தல் வாக்குகளுக்காக எங்களை நாங்கள் மாற்றி கொள்ள மாட்டோம்.
தமிழ்நாட்டில் அதிகம் மதுக்கடைகள் வட மாவட்டங்களில் தான் உள்ளன. ஆனால் வட மாவட்டங்களில் குறைந்த மதுக்டைகளை மட்டுமே மூடி உள்ளனர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரண்டு கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. 2026ம் ஆண்டு எங்களுக்கு பாமக வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட வேண்டும்.ஒரு துணி கடைக்கு சென்றால் ஒரு புடவையை எடுக்க நீண்ட நேரம் யோசனை செய்யும் நீங்கள் ஒரு முறை யோசித்து வாக்கு அளியுங்கள். கடந்த ஆண்டு காவிரியில் 620 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து உள்ளது. நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால், அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டர் இடைவெளியில் தடுப்பணையை கட்டுவோம். மது விலக்கை பாமகவால் மட்டுமே கொண்டு வர முடியும். அதனால் பெண்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி பேசினார்.