பெரம்பூர்: ஓட்டேரியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பித்துச் சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்ததால் அவர்கள் சிக்கியுள்ளனர். சென்னை காமராஜர் நகர், ஜோதி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் சுமித்ரா (37). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது அண்ணன் மகளான சத்தியஜோதி (20) என்பருடன் ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை, கூக்ஸ் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், சுமித்ரா வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
எதிர்பாராதவிதமாக பைக் தடுமாறி, மூவரும் கீழே விழுந்ததையடுத்து சுமித்ரா கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஓட்டேரி போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெரம்பூர் பி.பி.சாலையைச் சேர்ந்த ஹரிஷ் மாலி (22), ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் ஹரிஷ் மாலி மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறுவனை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்து, மற்ற இருவரை சிறையில் அடைத்தனர்.