திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் கிலோ 5 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய மொத்த காய்கறி விற்பனை சந்தை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் 60 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். மீதமுள்ள 40 சதவீத காய்கறிகள், சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தேனி, மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களுக்கு செல்கின்றன.
இந்நிலையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் முருங்கைக்காய் சில மாதங்களுக்கு முன்பு கிலோ 70 ரூபாய்க்கும் மேலாக விற்பனையானது. இதனால் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர். ஆனால் தற்போது வெளிமாநில வியாபாரிகள் வருவது குறைந்ததுடன் முருங்கை வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கரும்பு மற்றும் செடி முருங்கை கிலோ 7 ரூபாய்க்கும், மர முருங்கை கிலோ 5க்கும் விலைபோகிறது. இதனால் முருங்கை பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே ஓட்டன்சத்திரம் பகுதியில் முருங்கைக்காய் ஏற்றுமதி மண்டலம் உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.