ஆஸ்ட்ராவா,: ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் நட்சத்திர நாயகர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். செக் குடியரசு நாட்டில் ‘ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ சர்வதேச தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் ‘பவுல்’ செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 83.45மீட்டர், 3வது வாய்ப்பில் 85.29 மீட்டர், 4வது வாய்ப்பில் 82.17 மீட்டர், 5வது வாய்ப்பில் 81.01 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தார். கடைசி வாய்ப்பில் பவுல் செய்தார். எனினும் 3வது வாய்ப்பில் மற்றவர்களை விட அதிகபட்சமாக 85.29 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்ததால், முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார்.
அதே போல் 6 வாய்ப்புகளில் 2 வாய்ப்புகளை தவறவிட்ட தென்ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தவ் ஸ்மித் அதிகபட்சமாக 84.48 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து 2வது இடம் பிடித்தார். இவரைத்தொடர்ந்து கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் அனைத்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் அதிகபட்சமாக 83.63 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஈட்டியை எறிந்ததால் 3வது இடம் கிடைத்தது.