புதுடெல்லி: உறுப்பு தானம், திசு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே நாடு, ஒரே கொள்கை திட்டத்தை ஏற்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் சார்பில், “இந்தியாவில் தொழில்நுட்பம், செயல்முறைகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பு தானம் மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையை மேம்படுத்த தேவையான சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் இரண்டுநாள் சிந்தனை அரங்கம் நேற்று தொடங்கியது. ஒன்றிய குடும்பநல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ்.எஸ்.சாங்சன் சிந்தனை அரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவர் தன் உரையில், “உறுப்பு தானம் என்பது நமக்கு ஒரு வாழ்க்கை முறையாக மாற வேண்டும். இதனால் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்க முடியும். ஒரு நபர் உயிரிழந்த பிறகு உறுப்பு தானம் செய்வதால் பல்வேறு உடல் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு நோயாளிகள் புதிய வாழ்க்கையை பெற முடியும். பிரதமர் மோடி தன் மனதின் குரல் நிகழ்ச்சியில் தொடர்ந்து உறுப்பு தானம் பற்றி வலியுறுத்தி வருகிறார். நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இறந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
இதற்காக குறிப்பாக அரசு நிறுவனங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளம் கிடைப்பதை மேம்படுத்துவதே சுகாதார அமைச்சகத்தின் முக்கிய நோக்கம். உடல் உறுப்பு தானம், திசு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற திட்டத்தை ஒன்றிய அரசு ஏற்று கொண்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செயல்முறைகளை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது” என்று தெரிவித்தார்.