ஜெய்ப்பூர்: உடல் உறுப்புகள் தானம் ஒரு உன்னத செயல் ஆகும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் தனது அரசு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்புகள் தானம் குறித்த பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘மாநில அரசு சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.மாவட்ட அளவில் புதிய மருத்துவமனைகள் துவங்கப்பட்டு சுகாதார கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 3 மாவட்டங்களில் அரசு செலவில் மருத்துவ கல்லுாிகள் கட்டப்பட உள்ளது.
மாநில அரசு உடல் உறுப்புகள் தானம் செய்வதில் எந்த வித தயக்கமும் மக்களிடம் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது உன்னத செயல் ஆகும். உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான சாதகமாகன சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் ஏராளமான மனித உயிர்கள் காப்பாற்றப்படலாம். மிக அதிக செலவாகும் உடல் உறுப்புகள் தான சிகிச்சையை மாநில அரசின் சீரஞ்சீவி மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யலாம். இதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் மாநிலத்திலேயே இதற்கான சிகிச்சையை பெற முடியும். சீரஞ்சீவி காப்பீடு திட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருவாயை கொண்ட பொது பிரிவினர், இதர பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கு மாநில அரசே பிரிமீயம் தொகையை செலுத்தி விடும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.425 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்நிகழ்ச்சியின் போது, ரூ.771 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும்,10 சிரஞ்சீவி ஜனனி எக்ஸ்பிரஸ் வாகனங்கள், 25 மொபைல் உணவு சோதனை கூடத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரதுறை அமைச்சர் பர்சாதி லால் மீனா, வேளாண் துறை அமைச்சர் லால் சந்த் கட்டாரியா, பொதுபணித்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.