தென்காசி: ராமநதி அணை, கடனா அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்காசி மாவட்டம், ராமநதி பாசனம், வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கு 1433-ஆம் பசலி கார் சாகுபடி செய்வதற்கு 04.08.2023 முதல் 16.11.2023 வரை உரிய இடைவெளியுடன் 105 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடி அளவுக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ராமநதி அணையிலிருந்து நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் 1008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தென்காசி மாவட்டம், கடனா பாசனம், அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கு 1433-ஆம் பசலி கார் சாகுபடி செய்வதற்கு 04.08.2023 முதல் 16.11.2023 வரை உரிய இடைவெளியுடன் 105 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி அளவுக்கு மிகாமல், பாசனபருவகாலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் கடனா அணையிலிருந்து நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள 3987.57 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.