சென்னை: விதிமுறைகளை மீறியதற்காக பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், 120க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 35 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தென்மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து துறையின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஸ்டிரைக் அறிவித்த சங்கத்துடன் கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தவறிழைக்காத பேருந்துகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன்படி, சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளின் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பொதுமக்களின் வசதிக்கேற்ப ஆம்னி பேருந்துகளும் உரிய கட்டணங்களுடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும். விதிமுறைகளை மீறியதற்காக பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனிடையே போக்குவரத்துத் துறை ஆணையர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர்; கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்; அதனை மீறி கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை சிறைபிடித்தால் ஆட்சேபம் இல்லை என்று கூறினார்.