சென்னை: காமராஜ் நகர் திட்டப்பகுதியில் நடைபெறும் புதிய குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை, துறைமுகம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டப் பகுதிகளான துறைமுகம் திட்டப் பகுதி (க்ளைவ் பேட்டரி), காமராஜ் நகர் திட்டப் பகுதிகளை மறுகட்டுமானம் செய்வதற்காக மற்றும் சென்னை, துறைமுகம், க்ளைவ் பேட்டரி அருகில் என்னாத்தி மேம்பாலத்தின் கீழ் 4.26 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: துறைமுகம் திட்ட பகுதி மற்றும் காமராஜ் நகர் திட்ட பகுதிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. காமராஜ் நகர் என்று சொல்லப்படும் இடத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 14 குடியிருப்புகளும் அகற்றப்பட்டு, மறு கட்டுமானம் செய்து புதிதாக கட்டப்பட இருக்கின்றன. அந்த பகுதியினுடைய கள ஆய்வையும் மேற்கொண்டோம். இந்த பணிகளை விரைவுப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றோம்.
இப்போது எந்த வீடும் 400 சதுர அடிக்கு குறைவாக கட்டப்படக்கூடாது என்ற உத்தரவின் அடிப்படையில், 400 சதுர அடிக்கு குறைவான வீடுகள் கட்டப்படவில்லை. இந்த 400 சதுர அடியில் ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை, ஒரு சிறிய பூஜை அறை, வாஷ்ரூம் ஆகியவை அடங்கும் என்றார்.