தண்டையார்பேட்டை : புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கும் தங்கம் என்டர்பிரைசஸ் என்ற கடை உரிமையாளர் தங்கதுரை, கடந்த 16ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போன் செய்து, 6 ஏசி மிஷின்கள் புதிதாக வேண்டும், என்று கூறியுள்ளார். அதன்பேரில், 6 ஏசி மிஷின்களை எடுத்துக் கொண்டு அந்நிறுவன ஊழியர்கள், நேற்று முன்தினம் புறப்பட்டனர்.
பின்னர், தங்கதுரை கூறியபடி, தண்டையார்பேட்டை திருெவாற்றியூர் நெடுஞ்சாலை எம்.எம் தியேட்டர் எதிரே 4 ஏசிகளை இறக்கி வைத்துள்ளனர்.
மீதமுள்ள 2 ஏசிகளை அவரது கடைக்கு கொண்டு சென்றனர். கடை பூட்டி இருந்தது. தங்கதுரையை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை ஊழியர்கள் தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர் பகுதியில் வந்து பார்த்தபோது, அவர்கள் இறக்கி வைத்திருந்த 4 ஏசி மிஷின்கள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.