Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தமிழ் மொழியின் சிறப்பை போற்றும் வகையில் செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற தலைப்பில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள்

சென்னை: தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன்- 3-ந்தேதியை தமிழ்நாடு அரசு செம்மொழி நாளாக அறிவித்துள்ளது. இதனையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக, ஆதித்தொன்மையும் இலக்கண வளமையும், இலக்கியச் செழுமையும் நிறைந்த தமிழ் மொழி குறித்து “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற தலைப்பில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

செம்மொழி என்பது, ஒரு மொழியின் இலக்கியச் செழுமை தொன்மை, வளம் மற்றும் தனித்தன்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் சிறப்புப் பெருமையாகும். ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கான சில முக்கிய தகுதிகள் உள்ளன. அதாவது அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் தொன்மையானவையாக இருக்க வேண்டும். அந்த மொழி தனித்தே இயங்கும் ஆற்றல் கொண்டதாய் இருக்க வேண்டும்.

பல்வேறு மொழிகளின் தாய் மொழியாய் அம்மொழி இருக்க வேண்டும். தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அதன் இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும். செம்மொழியின் இலக்கியப் படைப்புகள் பல்வேறு இலக்கிய வகைகளில் கவிதை, நாடகம், வரலாறு, தத்துவம், அறிவியல் நூல்களாக இருக்க வேண்டும். செம்மொழி பிற மொழிகளைச் சாராத ஒரு தனித்த மொழியாக இருக்க வேண்டும். இத்தகைய அத்தனை சிறப்புகளையும் ஒருங்கே கொண்டது தமிழ் மொழி.

வரலாற்று அறிஞர்கள் தமிழின் பிறப்பை கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என்று தெரிவிக்கின்றனர். ஆனால், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன் தோற்றி மூத்தகுடி” என்பது தமிழ் சான்றோர்களின் கருத்து. தமிழின் மிகத் தொன்மையான படைப்புகளான இலக்கண நூலான தொல்காப்பியம், நன்னெறி நூலானதிருக்குறள், சங்க இலக்கியங்களான அகநானுறு, புறநானுறு, ஐம்பெரும் காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட பல ஆயிரம் நூல்கள் தமிழுக்கு மகுடம் சூட்டுகின்றன . செந்தமிழ் நவீன இலக்கியத்திலும் தனது தனித்த முத்திரை பதித்து வருகிறது. விஞ்ஞான யுகத்திலும் கன்னித் தமிழ் கணினியிலும் வீறுநடைப் போட்டு வருகிறது.

மொழி வளமும்- கவித்துவ அழகியலும் கொண்ட தமிழ் மொழிக்கு பெருமைச் சேர்க்கும் வண்ணம் முத்தமிழிஞர் கலைஞர் அவர்கள் 2004 ஆம் ஆண்டு செம்மொழி ஆங்கீகாரம் பெற்று தந்தார். கோவையில் செம்மொழி மாநாட்டையும் நடத்தினார். தமிழ் எழுத்தையும்- பேச்சையும் இறுதி வரை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்தவர். தெற்கே உதித்த ஒளி குன்றாத சூரியன். உலகம் போற்றும் உன்னத அரசியல் தலைவர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் உரை எழுதியவர். பல அரிய படைப்புகளை தமிழுக்கு அளித்து தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டு ஆற்றியவர்.

இத்தகைய அவரின் பெரும் பணிகளையும்- செம்மொழியான தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞருக்கு செம்மொழி விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன்- 3ஆம் தேதியை செம்மொழி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.

செம்மொழிக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதமாகவும், முத்தமிழறிஞரின் பெரும் தமிழ்த் தொண்டை போற்றும் வகையிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் செய்தி ஊடக மையம் வாயிலாக செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம்(X), படவரி(Instagram), முகநூல்(Facebook), புலனம் (WhatsApp), வலையொளி (YouTube) வாயிலாக கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளும் அதன் விவரங்களும் வருமாறு

தமிழ் சொற்பொழிவுப் போட்டி“செம்மொழி தமிழ் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு கணினி யுகமும் கன்னித்தமிழும் ஆகிய இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 நிமிடத்திலிருந்து 2 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

தமிழ் கவிதை எழுதும் போட்டி இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழே அமுதே! இரு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 20 வரிகளுக்குள் கவிதை எழுதி கோப்புகளாக அனுப்ப வேண்டும். கவிதை இதற்கு முன் வேறு எங்கும் பிரசுரம் ஆகியிருக்கக் கூடாது.

வினாடி - வினாப் போட்டி சங்க இலக்கியம்கலைஞரின் இலக்கியப் படைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பார்ம் வழியாக பதிவு செய்தல் வேண்டும்

அறநெறிக் கதைகள் திருக்குறள், சங்க இலக்கியம் உள்ளிட்டவற்றில் சொல்லப்பட்ட செய்திகளை கதைகளாகச் சொல்லி காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

என்னுள் இருக்கும் கலைஞர், காலத்தை வென்ற தமிழ் அல்லது தமிழ் வளர்த்த அறிஞர்கள் உள்ளிட்டவை கருப்பொருளாக கொண்டு கணினி வரைப்படங்கள் அல்லது ஓவியங்கள் வரைந்து அனுப்ப வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கு கீழ்கண்ட கீயூஆர் கோட்டினை ஸ்கேன் செய்யவும்.