சென்னை: பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கன்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கு திருமணமாகி சர்வேஷ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று காலை வீட்டில் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சர்வேஷ் சிறிய பிளாஸ்டிக் பந்து ஒன்றை தவறுதலாக விழுங்கி விட்டது. இதில், பிளாஸ்டிக் பந்து தொண்டையில் சிக்கிக் கொண்டு மூச்சு விட முடியாமல் திணறியபடி துடித்துக் கொண்டிருந்த குழந்தையை கண்ட பெற்றோர் அலறி அடித்தபடி அருகில் உள்ள பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சித்த நிலையில் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8மாத குழந்தை தவறுதலாக பந்தை விழுங்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.