சென்னை: தமிழ்நாட்டு மக்களை அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் ஒப்புயர்விலா செயல் திட்டத்தின் கீழ் நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் மக்களை நேரில் சந்திக்கும்போது, திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்குவார்கள். அந்த உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
1. எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?.
2. மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?.
3. மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா?.
4. டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதல்வர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
5. இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா?
6. அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம்/இல்லை என்ற வடிவில் மக்கள் பதிலளிக்கலாம். “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பரப்புரையின்போது கேட்கப்படும் 6 கேள்விகளுக்கு பதிலளித்து திமுக உறுப்பினராக மக்கள் இணையலாம். ஓரணியில் தமிழ்நாட்டில் இணைய 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம்.