சென்னை: நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் தொடங்கி வைக்கிறேன். இன்று (நேற்று) தொடங்கி, 45 நாட்கள் தொடர்ந்து இந்த பயணம் நடைபெறும். இன்று 38 வருவாய் மாவட்ட கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அவரவர் பகுதிகளில் ஊடகத் தோழர்களையும், பத்திரிகை நண்பர்களையும் சந்திக்க இருக்கிறார்கள்.
நாளை (இன்று), தமிழ்நாட்டில் இருக்கும் 76 மாவட்ட திமுகவிலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். அதை தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி (நாளை) முதல், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம்.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கள் அனைவரையும் சந்திக்கப் போகிறோம்.அப்போது, திமுகவில் இணைய விரும்புவோர் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
* மக்களுக்காக நலத் திட்டங்களை கொண்டு வரும்போது அதிகாரிகள் தவறு செய்யும் போது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எப்ஐஆர் போட்டிருந்தால் பிரச்னையில்லாமல் இருந்திருக்கும். அதுபற்றி?
என்ன தவறு செய்தார்கள்? தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது செய்துவிட்டோம். இன்றைக்குக்கூட மேலதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
* எதிர்க்கட்சியில் உள்ள குடும்பங்களைச் சந்திக்கப் போகிறீர்களா? அவர்களிடமும் இதை வலியுறுத்தப் போகிறீர்களா?
நிச்சயமாக சொல்லப் போகிறோம். விருப்பம் உள்ளவர்களைச் சேர்க்கப் போகிறோம். கட்டாயப்படுத்திச் சேர்க்கப் போவதில்லை. சேர்ந்தே தீருங்கள் என்று சொல்ல மாட்டோம். அவ்வாறு சொன்னாலும் சேர மாட்டார்கள். அதனால் அவர்கள் விருப்பம் இருந்தால் சேர்ப்போம்.
* எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும் செல்வீர்களா ?
அது அங்கிருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.
* கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது?
தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்.
* இந்தக் கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பிருக்கிறதா?
வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், வாய்ப்பு வருகின்ற நேரத்தில் அதை எப்படி சேர்ப்போம் என்று கலந்துபேசி செய்வோம்.
* திமுகவின் முத்தாய்ப்பான மூன்று திட்டங்கள் என்றால், எதை வரிசைப்படுத்துவீர்கள்?
காலை உணவுத் திட்டம். அது தேர்தல் வாக்குறுதியில் கிடையாது. அதை நிறைவேற்றியிருக்கிறோம். மகளிர் உரிமைத் திட்டம். கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்னும் 20 சதவீதம் மீதம் இருக்கிறது. அதை அவர்கள் பூர்த்தி செய்யாமல் தவறவிட்டுவிட்டார்கள். சிலர் தவறுதலாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் திருத்தி, அதற்கு ஒரு முகாம் போட்டு, அதையும் செப்டம்பர் மாதத்திலிருந்து வழங்க இருக்கிறோம். அது, ஒரு பெரிய திட்டம். பேருந்தில் கட்டணமில்லா விடியல் பயணம் அது ஒரு பெரிய திட்டம். மாணவ- மாணவியர்கள் பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளுக்குச் செல்லும்போது 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் எனும் அற்புதமான திட்டம். இப்படி பல திட்டங்கள் இருக்கிறது. எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை.
* ‘உடன்பிறப்பே வா’ என்றீர்கள்? உற்சாகமாக இருக்கிறதா?
அதை தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேனே. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றரை நாள் ஒதுக்குகிறேன். நீங்களே பார்த்திருப்பீர்கள். நான் ஒரு நாளைக்கு மூன்று தொகுதியை எடுத்துக் கொள்கிறேன். காலை, மாலை. ஏனென்றால், கோட்டைக்குச் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அரசு வேலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கும் செல்ல வேண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 234 தொகுதிகளைச் சேர்ந்தவர்களையும், நிச்சயமாக இதே அறிவாலயத்தில் அழைத்துச் சந்திப்பேன்.
* ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகிதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்போது இளைஞர்கள், இளம் பெண்களை கவரும் வகையில் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டு வந்திருக்கிறோம். அந்தத் திட்டத்தின் மூலமாக சுமார் 40 லட்சம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறோம். இன்று (நேற்று) கூட ஒரு பெரிய நிகழ்ச்சியை முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். மூன்று லட்சம் பேருக்கு அதில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில், 20000 ரூபாய், 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் சம்பளத்தில் எல்லாம் கூட வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.
* ஓரணியில் தமிழ்நாடு எவ்வளவு இலக்கு வைத்து உறுப்பினர்கள் சேர்க்கைக்கு திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
நாங்கள் ஒரு இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் 30 % சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் 30 சதவிதம் அல்ல; 40 சதவிதம் சேர்ப்போம் என்று உறுதியும் கொடுத்திருக்கிறார்கள்.
* நான்காண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. மக்கள் மனதில் எப்படி இருக்கிறது?
இந்த உரிமைதொகையைப் பொறுத்தவரை, திமுகவினர் மட்டும் வாங்கவில்லை. அனைத்துக் கட்சிகளில் இருக்கும் மகளிரும் பெற்று வருகிறார்கள். அதைத்தான் அப்போதே நான் சொன்னேன். பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே சொன்னேன். இந்த ஆட்சி, வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும். வாக்களிக்கத் தவறியவர்கள், இப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அதுபோன்ற சூழலில்தான் ஆட்சியை நடத்துவேன் என்று சொன்னேன். நடத்திக் கொண்டிருக்கிறேன்.
* அண்மையில் அமித்ஷா மதுரையில் பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது, நான் இனி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருவேன் என்று கூறினார். அது பற்றி?
அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். வந்து பொய்யைப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்கு தெரிகிறது. அது எங்களது தேர்தல் நேரத்தில் லாபமாக அமையும். அதேபோன்று, இந்த கவர்னரை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், கவர்னர் மக்களுக்கு நல்லது செய்தாலும் இனி எடுபடாது. அந்தளவுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவர்கள் எல்லாம் அடிக்கடி வர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், இ.பரந்தாமன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி, பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
* ‘200 தொகுதிகளை தாண்டுவோம்’
2026ல் எவ்வளவு சட்டப் பேரவைத் தொகுதிகளை இலக்காக வைத்திருக்கிறீர்கள்?
நாங்கள் ஏற்கனவே 200 தொகுதிகள் என்று சொல்லியிருக்கிறோம். அதைத் தாண்டிதான் வரும் என்று நினைக்கிறேன்.