சென்னை: சென்னையில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், `ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் முன்னெடுப்பு மற்றும் பரப்புரை பயணம்’ தொடர்பாக, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காக்க தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி தொடங்கி வைக்கவுள்ள ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை பட்டிதொட்டி எங்கும் சேர்ப்போம். அடிமைகள் பாசிஸ்ட்டுகளின் கூட்டணியை வீழ்த்துவோம். ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல், நமக்கு மிக மிக முக்கியமான தேர்தல். பாசிச பாஜ அரசுடன் இந்தியாவிலேயே கருத்தியல் ரீதியாக போட்டி போடக்கூடிய ஒரே இயக்கம் திமுக. ஒரே தலைவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை நீங்கள் அனைவரும் றிவீர்கள். அதன் காரணமாகத்தான் நம் திராவிட மாடல அரசை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று, பாசிச பாஜ அரசு துடித்து
கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் எதிர்க்கட்சிகளை எல்லாம் தொடர்ந்து மிரட்டி மிரட்டி அவர்களின் அணிகளில் சேர்த்து
கொண்டிருக்கிறார்கள்.
பாஜவுடன் இனி எதிர்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அதிமுக சொன்னது. ஆனால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது. இப்படி நம்மை எதிர்க்க எந்த எல்லைக்கும் செல்ல பாசிச பாஜக துணிந்து இருக்கிறது. ஏனென்றால், நாம் தான் பாசிச பாஜவிற்கு கருத்தியல் ரீதியாக உண்மையான எதிரி. நம்மை எதிர்கொள்ளவே முடியாமல் திணறுகிறது பாஜக. அதற்குக் காரணம் நம் தலைவர் தான். மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினால் தான் பள்ளிக் கல்வித் துறைக்கான 2,152 கோடி ரூபாய் நிதியைத் தருவோம் என்று ஒன்றிய பாசிச பா.ஜ.அரசு சொன்னது.
நீங்கள் ரூ.2,000 கோடி இல்லை 10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களின் மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டார் நம் முதல்வர். இப்படி தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை உறுதியோடு எதிர்ப்பவர், நம் தலைவர். வலிமைமிக்க தொண்டர்களை உற்சாகமாக அரவணைத்துச் சென்று, மதுரை பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு கொடுத்து இருக்கின்ற கட்டளையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றி மிக மிக முக்கியமானது. அதற்கு நிர்வாகிகளுக்குள் இருக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை, முரண்களை எல்லாம் மறந்து, கருத்து வேறுபாடுகளை எல்லாம் கடந்து நாம் அனைவரும் ஓரணியில் நின்று பணியாற்றுவது அவசியம். திமுக ஏழாவது முறையாக வெற்றி பெற்று, தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வர் ஆவதே நம் அனைவரின் ஒரே இலக்கு.
அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட உறுதி ஏற்போம். ஓரணியில் தமிழ்நாடு என்று தலைவர் சொல்லி இருக்கின்ற, இந்தத் திட்டத்தை வெற்றி பெற வைத்து விட்டோம் என்றால் அதுவே சட்டமன்றத் தேர்தலில் நாம் பாதி வெற்றியை அடைந்து விட்டோம் என்பதை உறுதி செய்ததாகி விடும். எனவே அதை மட்டுமே மனதில் கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* நம்மை எதிர்க்க எந்த எல்லைக்கும் செல்ல பாசிச பாஜ துணிந்து இருக்கிறது. ஏனென்றால், நாம் தான் பாசிச பாஜவிற்கு கருத்தியல் ரீதியாக உண்மையான எதிரி.