தித்திக்கும் ஓவியமாக மகாத்மா காந்தியின் படம் வரைந்து பகுதிநேர ஆசிரியர் செல்வம் அசத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவியஆசிரியராகப்பணிபுரிந்து வரும் செல்வம் என்பவர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக பெட்டிக்கடை ஆரஞ்சு மிட்டாயை தண்ணீரில் நனைத்து வேறு எந்தவித வண்ணங்களும், தூரிகையும் பயன்படுத்தாமல் மகாத்மா காந்தி படத்தை வரைந்து அசத்தினார். இதற்குக் காரணம் நம்மில் பலருக்கு சுதந்திர தினம் என்றாலே ஆரஞ்சு மிட்டாய்தான் நினைவுக்கு வரும். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களிலும் கொடியில் பூவை வைத்து கொடிக் கம்பத்தில் கட்டி தலைமை ஆசிரியர் கொடியை ஏற்றும்போது எல்லோரும் கைதட்டி கொண்டாட்டமாக இருக்கும். ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். இப்போதும் சுதந்திர தினம் என்றால் தட்டு நிறைய வைக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சுச் சுளை போன்ற மிட்டாய்தான் நினைவுக்கு வரும். பத்து நிமிடத்தில் மகாத்மாவின் படத்தை வரைந்ததைக் கண்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வத்தை வெகுவாகப் பாராட்டினர். அப்துல் கலாமின் நினைவுநாளில் அவருடைய மரம் வளர்ப்போம் சுர்று சூழலை பாதுகாப்போம், கணவு காணுங்கள் என்பது போன்ற கருத்துகளை மாணவர்கள் இடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக அப்துல்கலாமின் படத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிக்கொண்டே வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.