சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24ம் கல்வியாண்டிற்கு பிறகு, புதிதாக மருத்துவ கல்லூரி துவங்க அனுமதி அளிக்கப்படும்போது, 50, 100, 150 என்ற எண்ணிக்கையில்தான் அனுமதி அளிக்கப்படும் என்றும், 150 இருக்கைகளுக்கு மேல் அனுமதி அளிக்கப்படாது என்றும், 10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற குறியீட்டை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10 லட்சம் மக்களுக்கு 100 இருக்கைகள் என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 8 கோடி என்றிருக்கின்ற நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிக்கையின்படி, 8,000 மருத்துவ இருக்கைகள்தான் இருக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் கூடுதலாக 3,600 மருத்துவ இடங்கள் உள்ளன. எனவே, 10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இருக்கைகள் என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.