சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடக அரசு மத்திய அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தக் கடிதத்தில், மேகதாது அணைத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் வழங்குமாறும், மேகதாது திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எவ்விதத் தடையாணையையும் விதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
மேகதாது திட்டம் குறித்த வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதுகுறித்து காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பேசியது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதற்குச் சமம். தமிழ்நாட்டினுடைய ஒப்புதல் இல்லாமல், இதுகுறித்து பேசுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை இல்லை. டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்க முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு தனது கண்டனத்தை தமிழ்நாடு முதல்வர் தெரிவிக்க வேண்டும். மேகதாது அணைத் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.