Wednesday, February 28, 2024
Home » அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு பயன்படுத்த தடையை எதிர்த்த ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு பயன்படுத்த தடையை எதிர்த்த ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

by Ranjith

சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனது நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம், வழக்கறிஞர் ராஜலட்சுமி பிரகாஷ், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இ.பாலமுருகன் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 16ம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி போதிய வாய்ப்பு தரவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அப்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டால் அதையும் தனி நீதிபதி கணக்கில் எடுத்திருப்பார். தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் இந்த நீதிமன்றம் எந்த குறையையும் காணவில்லை. எனவே, இந்த மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் தடையை நீக்க கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுவை தனி நீதிபதி பரிசீலித்து சட்டத்திற்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

* தடையை மீறி அதிமுக கொடியுடன் ஓபிஎஸ் கூட்டம்: எஸ்பியிடம் புகார்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தேனி அருகே மதுராபுரியில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றார். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் பெயரில் தேனி மாவட்டத்தில் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கொடிகளையும் கட்டியுள்ளனர். இதனால் ஆங்காங்கே எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டிகேஆர்.கணேசன் தலைமையில் வக்கீல்கள், தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவை சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர்.

You may also like

Leave a Comment

three + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi