மகேந்திரகர்: ‘இந்தியா கூட்டணியில், பசு பால் கறப்பதற்கு முன்பே, நெய்க்கு சண்டை நடக்கிறது’ என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். அரியானாவின் 10 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், அங்கு மகேந்திரகரில் பிரதமர் மோடி நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்தலில் நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், நாட்டின் எதிர்காலத்தையும் நீங்கள் தீர்மானிப்பீர்கள். ஒருபுறம், ஏற்கனவே நீங்கள் சோதித்து பார்த்த சேவகன் மோடி இருக்கிறேன். மறுபுறம் யார் இருக்கிறார்கள் என யாருக்குமே தெரியாது. நான் உயிருடன் இருக்கும் வரை தலித்கள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. தற்போது இந்தியா கூட்டணியில் 5 ஆண்டுக்கு 5 பிரதமர்கள் இருக்க வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பசு பால் கறப்பதற்கு முன்பே அங்கு நெய்க்கு சண்டை ஆரம்பித்து விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.