டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை, 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அதனால் பிரதமரை பேசவைக்கும் பொருட்டு காங்கிரஸ் சார்பில், ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்கும் அடுத்த 10 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று 8வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. மணிப்பூர் விவகாரத்தை வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சிகள் அணுகுகின்றனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. இன்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது, எதிர்க்கட்சியினர் வெளியே சென்றுவிட்டனர். மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு வெறும் அரசியல் பிரச்னை மட்டுமே. மணிப்பூர் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உண்மையாக மணிப்பூர் மீது அக்கறை கொண்டிருந்தால் அதை பற்றி விவாதித்திருப்பார்கள் இவ்வாறு கூறினார்.