உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம்-வெங்கடாசலபுரம் தெருவில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினிமாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அண்மையில் புதுப்பித்துக் கட்டுவதற்தாக இடித்து அகற்றப்பட்டு அதே இடத்தில் புதிய கோயில் கட்டுவதற்கு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
இந்த கோயில் கட்டிடம் தனது வீட்டிற்கும், தெருவிற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படுவதாக கூறி நடிகர் வடிவேல் பாணியில் அப்பகுதி கீழத்தெருவை காணவில்லை என்று பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி.முத்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தார். இதனால் கோயில் திருப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து பொய்யான குற்றச்சாட்டை கூறி கோயில் கட்டுவதற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, ஜி.பி.முத்துவின் வீட்டை நேற்று பெருமாள்புரம் ஊர் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீசார் இரு தரப்பினர் சமதானப்படுத்தினர்.