நெல்லை: சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூரையாடப்பட்ட விவகாரத்தில் 9 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை பாளையங்கோட்டை ரயில்வே பீடர் சாலையச் சேர்ந்த மதன் என்பருவருக்கும், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் நேற்று முன்தினம் ரெட்டையார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட சாதி சங்கத்தை சேர்ந்த சிலரும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லை மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல்ராஜா, 5 பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.