டெல்லி: எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. என்று பெயர் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு போட்டியாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A. என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. என்று பெயர் வைத்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் கிரிஷ் பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் எதிர்க்கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக I.N.D.I.A.-வின் பெயரை பயன்படுத்துவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் அமைதியான, வெளிப்படையான மற்றும் நியாயமான வாக்குகள் பெறுவதை பாதிக்கும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது நாட்டு மக்களிடம் தேவையற்ற வன்முறையை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் சட்ட ஒழுங்கையும் பாதிக்கக்கூடும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 எதிர்க்கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.