வெற்றி என்பது எளிதானதல்ல. சாதனையாளர்களின் ஆரம்ப கால பாதைகள் கரடுமுரடானவையே. அவர்கள் அதற்காக அஞ்சாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பார்களால் தான் தொடர் வெற்றிகளைப் பெறமுடியும்.ஒரு சிலையை வெகுநாட்களாக வடித்துக்கொண்டிருந்தார் ஒரு சிற்பி.அப்போது அதைத் தினமும் கணித்துவந்த ஒரு மனிதர் என்ன நீ தினமும் அதே சிலையில் மூழ்கிக்கிடக்கிறாய்? எனக்கு எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லையே? என்று கேட்டார்.அதற்கு அந்த சிற்பி ஐயா! ஒவ்வொரு நாளும் அதில் சில மாற்றங்களைச் செய்து சிலையின் நரம்புகளைப் புடைக்கச் செய்துள்ளேன் உதடுகளை அழகாக மாற்றி உள்ளேன். காதுப்பகுதியிலேயே இயற்கையாக காட்ட முயற்சித்துள்ளேன். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றத்தைக் கூர்ந்து செய்துவருகிறேன். இதை நீங்கள் கவனிக்கவில்லையா என்று கேட்டார்.அதற்கு அந்த மனிதர் நீ செய்வது எல்லாம் சிறு சிறு விஷயங்கள், இதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டுமா? என்றார்.ஐயா இந்த சிறு சிறு விஷயங்களைச் சரியாக செய்தால்தான் சிலை முழுமை பெறும்.சிலையின் மதிப்பிற்குச் சிறு சிறு மாற்றங்கள் தான் மிக அவசியம்.அது மட்டுமல்ல நான் சிரமம் பார்க்காமல் தொடர்ந்து சிலையைச் செதுக்கிய வண்ணம் இருந்ததால் தான் சிலைக்கு உயிரோட்டம் கிடைத்தது. இல்லையெனில் வெறும் கல்லாகத் தான் பார்க்கப்படும். அந்தக்கல் கூட உளியின் அடியைத் தாங்கியதால்தான் தன்னுள் இருக்கும் சிலையை வெளியே காட்ட முடிந்தது என்றார்.
அதுபோலவே தான் வாழ்க்கையிலும் வரும் சோதனைகளைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.நமக்கான எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே உள்ளன. சில நேரங்களில் அவற்றை நாம் சரியாகப் பயன்படுத்துவதில்லை. மாணவர்களும் இதுபோன்றுதான் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் போட்டியில் பங்கு பெறாமல் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் இருப்பதாலே வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணமுடியாமல் முடங்கிப் போய் விடுகிறார்கள்.ஆனால் வாய்ப்புகளைக் கண்டறிந்து அதை சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த இளம் சாதனையாளர் சிம்ரன் சிங்கை சொல்லலாம்.
டெல்லியைச் சேர்ந்த 14 வயது மாணவியான சிம்ரன் சிங். இவர் டெல்லியில் உள்ள ‘தி ராம்’ பள்ளியில் படித்து வருகிறார். எங்கேயாவது பயணம் மேற்கொள்ளும்போது பெற்றோர் எப்படித் தயாராகிறார்கள் என்பதை இவர் கவனித்ததன் பலனாக ஒரு புதுமையான தொழில் முயற்சி ஒன்றை இளம்வயதில் செய்து சாதித்து உள்ளார்.சிம்ரனின் பெற்றோர் பயணம் செல்லத் தயாராகும்போது பாதுகாப்புத் தொடர்பான முக்கியமான பொருட் களைப் பட்டியலிட்டு எடுத்துச் செல்வது வழக்கம். பயண தேதிக்கு முன்பு இந்தப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு அவர்கள் கடைகடையாக ஏறி இறங்குவார்கள்.சில முக்கியப் பொருட்கள் கிடைக்காமலும் போகும். தேவையில்லாத சில பொருட்களை அநாவசியமாக சுமந்து செல்லவேண்டி சூழல் ஏற்படும் என்கிறார் சிம்ரன்.
இந்தப் பிரச்னையை நாம் மட்டும்தான் சந்திக்கிறோமா? நிச்சயமாக இல்லை, பயணம் செல்லக்கூடிய எல்லோருக்கும் இந்தப் பிரச்னைகள் இருக்கத்தானே செய்யும்?சிம்ரன் தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கான விடைகளைஆராய்ந்தார்.இந்தத் தேடலின் பலனாக 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உருவானது தான் Safely Nomadic என்ற பெயரில் இளம் வயதிலேயே சிம்ரன் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.இந்த நிறுவனம் பயணம் மேற்கொள்வோருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்புப் பொருட்கள் அடங்கிய கிட்டை வழங்குகிறது. சக நண்பர்களுடனும், இளம் தொழில்முனைவோர் அகாடமி ஆலோசகர்களுடனும் கலந்துரையாடினேன். என் முயற்சிக்குப் பெற்றோர் முதலீடு செய்தார்கள். இப்படித்தான் என் தயாரிப்பு வடிவம் பெற்றது என்கிறார் சிம்ரன்.
தன்னுடைய நிறுவனம் மூலமாக இரண்டு வகையான தயாரிப்புகளை வழங்குகிறார் சிம்ரன். ஒன்று பெண்களுக்கானது, மற்றொன்று குழந்தைகளுக்கானது. வழக்கமாக மக்கள் கொண்டு செல்லும் மருந்துகள், முகக்கவசங்கள், சானிடைசர்கள், பயணத்தின்போது பயன்படுத்தும் டிஷ்யூ,டாய்லெட் சீட் கவர், பேப்பர் சோப், சூயிங்கம், மாஸ்க், சானிடைசர், பேண்ட் எய்ட், காட்டன், ஆண்டிசெப்டிக் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ஒவ்வொரு தொகுப்பிலும் இருக்கும்.பெண்களுக்கான பிரத்யேக கிட்டில் சானிட்டர் பேட், சிறுநீரை அப்புறப்படுத்தும் குழல், பெப்பர் ஸ்ப்ரே, சேஃப்டி அலாரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதுதவிர வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவை என்ன என்பதை சிம்ரன் புரிந்துகொள்ள முயன்றார். சந்தையை ஆய்வு செய்தார். ஏராளமான நேர்காணல்கள் நடத்தினார்.
குடும்பத்துடன் பயணம் செல்லும்போது, குதூகலத்துடன் பயணத்திற்குக் கிளம்பும் குழந்தைகள்கூட ஒருகட்டத்தில் சலிப்படைந்துவிடுவது இயல்புதான். பல பெற்றோர் இதைக் கவனித்துள்ளனர். பெற்றோர்களுடன் பேசியதில் சிம்ரன் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டார்.சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அம்சங்கள் பெற்றோர்களுக்குக் கவலையளித்தாலும்கூட 85 சதவீத பெற்றோர்களுக்கு குழந்தைகளின் பொழுதுபோக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது என்கிறார் சிம்ரன். எனவே குழந்தைகள் ஆர்வமாக ஈடுபடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களைத் தொகுப்பில் சேர்க்க விரும்பினார்.ஆக்டிவிட்டி புத்தகங்கள், ஆரிகாமி பேப்பர்கள், ஸ்கெட்ச் பென், டயரி மில்க் சாக்லேட் போன்றவற்றை குழந்தைகளுக்கான கிட்டில் சேர்த்தார். வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப பொருட்கள் தொகுக்கப்படுவதே இந்தச் சேவையின் முக்கிய சிறப்பம்சம் ஆகும் என்கிறார் சிம்ரன்.
இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒரு சில பொருட்கள் தேவைப்படுவோர் மொத்த கிட்டையும் வாங்க வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் கிட்டில் தேவைப்படும் பொருட்களை மட்டும் தேர்வுசெய்து சிம்ரனைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதற்கேற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது.பெண்களுக்கான தொகுப்பு 2,800 ரூபாய் என்றும் குழந்தைகளுக்கான தொகுப்பு 2,000 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டிற்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்கிறார் சிம்ரன்.வாட்ஸ் அப் மூலமாகவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாகவோ வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம் என்று பகிர்ந்துகொண்டார். இந்தத் தொகுப்பு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே நிறைய பொருட் களின் தொகுப்புகளை விற்பனை செய்துள்ளார் சிம்ரன். இதன் மூலம் முதல் விற்பனையில் 7,800 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
டெல்லி பகுதிகளில் உள்ளூர் மருந்தகங்கள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் முதல் ஆண்டில் 300 தொகுப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். இரண்டாம் ஆண்டில் தற்போதைய தொகுப்புகளுடன் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் முழுமையான தொகுப்பாக வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.பல்வேறு ஆன்லைன் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்கவும் சிம்ரன் திட்டமிட்டுள்ளார்.மூன்றாம் ஆண்டில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் பதிவு செய்யவும் முதியோர்களுக்கான பிரத்யேக கிட் அறிமுகப்படுத்தவும் விரும்புகிறார். பெருந்தொற்று பிரச்சனை ஓய்ந்த பின்னர் பள்ளிகளிலும், கண்காட்சிகளிலும் ஸ்டால் அமைத்து மக்களிடம் தன்னுடைய தயாரிப்பைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இளம் தொழில்முனைவோராக உருவான சிம்ரன்.படிப்பிலும் சிறந்து விளங்கி,தானே வாய்ப்புகளை கண்டறிந்து இளம் வயதிலேயே தொழில் முனைவோராக உருவாகி சாதித்துக் கொண்டிருக்கும் சிம்ரன் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன் உதாரணம் என்பதில் ஐயமில்லை.