புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த அரியானா தனியார் பல்கலைக்கழக துறைத்தலைவர் மஹ்முதாபாத்தை போலீசார் கைது செய்தனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுதொடர்பாக கூறுகையில்,’அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகான் மஹ்முதாபாத்தின் கைது, பாஜவிற்கு எந்தக் கருத்து பிடிக்கவில்லையோ, அதைப் பற்றி அவர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நமது கடற்படை அதிகாரி, நமது வெளியுறவுச் செயலாளர், அவரது மகள் ஆகியோரை குறிவைத்தும், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு கர்னலைப் பற்றி பாஜ அமைச்சர் ஒருவர் இழிவான கருத்துக்களை வெளியிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. மபி பா.ஜ அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறார். தேசிய நலன் மேலோங்கியிருக்கும் போது, ஆயுதப் படைகளையும் அரசாங்கத்தையும் ஆதரிப்பது என்பது அரசாங்கத்தை கேள்வி கேட்க முடியாது என்று அர்த்தமல்ல. தேசிய ஒற்றுமை காங்கிரஸ் கட்சிக்கு மிக உயர்ந்தது. தற்போதைய நிலையை பயன்படுத்தி சர்வாதிகாரத்தை வளர்க்க முடியும் என்ற எண்ணம் பாஜவுக்கு இருக்கக்கூடாது. ஜனநாயகம் உயர்ந்து நிற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து பேராசிரியர் கைதுக்கு காங். கண்டனம்
0