புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் 15வது காலாட்படை பிரிவின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி இதுபற்றி நேற்று கூறுகையில்,’பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7-8 இடைப்பட்ட இரவில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் குறிவைக்க பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தோம்.
அவர்கள் இந்திய ராணுவ மையங்கள், மத வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை இலக்குகளாக வைத்து குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இவற்றில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் பாகிஸ்தானின் மிக முக்கியமான இலக்காக இருக்கும் என்று எங்களுக்கு தோன்றியது. எனவே பொற்கோயிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பு அமைப்பை வழங்க கூடுதல் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் நிறுவினோம். பாக். தாக்குதலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராக இருந்தது. இதனால் அனைத்து உள்வரும் அச்சுறுத்தல்களையும் தடுத்து அழித்தது ’ என்று தெரிவித்தார்.