புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென இந்தியா கூட்டணியின் 16 கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. அதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது குண்டுவீசி தாக்கியது.
இந்த விவகாரத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளிடம் விளக்க அனைத்து கட்சி எம்பிக்கள் கொண்ட 7 குழுக்களை ஒன்றிய அரசு அமைத்து, அக்குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று விளக்கமளித்து வருகின்றனர். அதே சமயம், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டுமெனவும் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டக் கோரி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், தீபேந்தர் ஹூடா, திரிணாமுல் காங்கிரசின் டெரெக் ஓ பிரையன், ஆர்ஜேடியின் மனோஜ் ஜா, சமாஜ்வாடியின் ராம்கோபால் யாதவ், சிவசேனாவின் சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது, பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் பலியானவது உள்ளிட்ட தொடர் நிகழ்வுகள் பற்றி விவாதிக்க கட்டாயம் சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், ‘‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர கூட்டக்கோரி 16 கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன. அரசு நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும், நாடாளுமன்றம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சிறப்பு கூட்டத்தை வலியுறுத்துவதற்கான கூட்டு முயற்சியை நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி அந்தந்த கட்சிகளின் தலைவர்களும் எடுத்துள்ளனர்’’ என்றார். இந்த கடிதம் விரைவில் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் தீபேந்தர் ஹூடா கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் காங்கிரசும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவளித்துள்ளன. ஒன்றிய அரசும் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தவும் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன? என்பது குறித்த தகவல்களை முன்வைக்க முடியும். இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’’ என்றார்.
* கையெழுத்திட்ட கட்சிகள்
பிரதமர் மோடிக்கு அனுப்பப்படும் கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, திமுகவின் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட், ஐயுஎம்எல், சிபிஐ, புரட்சிகர சோசலிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ், மதிமுக, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சி எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர். கலைஞர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வேண்டியிருந்ததால் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
* ஆம் ஆத்மி வரவில்லை
ஆலோசனைக் கூட்டத்தில், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகள் பங்கேற்கவில்லை. சிறப்பு கூட்டத்தொடர் கோரி ஆம் ஆத்மி தரப்பில் பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென கோரிக்கை எதுவும் இல்லை என தேசியவாத காங்கிரஸ் சமீபத்தில் கூறிய நிலையில், மும்பை சென்றதும் சரத்பவாருடன் தான் பேச இருப்பதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.