புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் எதிர்கட்சிகளின் ஆதரவு உதவியல்ல; அது அவர்களது கடமை என்று பாஜக மாஜி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஷாநவாஸ் ஹுசைன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அளித்து வரும் ஆதரவு என்பது அவர்கள் செய்யும் உதவியல்ல; மாறாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.
கடந்த 7 முதல் 10ம் தேதி வரை நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 11 விமானத் தளங்களையும், தீவிரவாத மையங்களையும் தாக்கியது. கடந்த 2019ம் ஆண்டு பாலகோட் தீவிரவாத தாக்குதல்களின் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இம்முறை முழு ஆதரவு அளித்ததை பாராட்டுகிறேன். இந்த ஒற்றுமை, இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை உலக அரங்கில் வலுப்படுத்தும். பாகிஸ்தான் தன்னை அணு ஆயுத நாடு என்று கூறி ஆணவம் காட்டியபோது, பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, துல்லிய தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் சரியான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், அதற்கு இந்தியா தேவையான பதிலடிகளை கொடுக்கும். தேசிய நலன்களின் அடிப்படையில் ஒன்றிய அரசுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.