புதுடெல்லி: ‘‘ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, மாறி வரும் இந்தியாவின் அடையாளம். இது உலக அரங்கில் நாட்டின் உறுதிப்பாடு, தைரியம் மற்றும் அதிகரித்து வரும் வலிமையை பிரதிபலிக்கிறது’’என பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: இன்று ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. கோபம், உறுதியால் நிரம்பி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய நம்பிக்கையையும் சக்தியையும் தந்துள்ளது. எல்லை தாண்டி தீவிரவாத கட்டமைப்புகளை இந்திய படைகள் துல்லியமாக தாக்கியது அசாதாரணமானது. இந்த நடவடிக்கை ஒருமுறை மட்டுமே செய்யப்படும் ராணுவ நடவடிக்கை அல்ல. மாறி வரும் இந்தியாவின் அடையாளம் இது. ஆபரேஷன் சிந்தூர் என்பது நமது மன உறுதி, தைரியம் மற்றும் வலிமையின் பிரதிபலிப்பு. இதன் விளைவு நாடு முழுவதும் ஆழமாக எதிரொலித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் தேசபக்தி கவிதைகள் பதிவிடுதல், ஓவியங்களை வரைதல் என கொண்டாடினர். நாடு முழுவதும் ஆயுத படைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திரங்கா யாத்திரைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. ராஜஸ்தானின் பிகானேருக்கு சமீபத்தில் நான் சென்ற போது கூட குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பரிசாக கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூரை போற்றும் வகையில் பல குடும்பங்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயரிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள், தொழில்நுட்பத்தின் மூலம் நமது வீரர்களின் துணிச்சலை காட்டுகிறது. சிந்தூர் நடவடிக்கை மூலம் உள்நாட்டு ஆயுத தயாரிப்புக்கு புதிய ஊக்கம் உருவாகி உள்ளது. இந்த வெற்றி நமது பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பங்களித்த ஒவ்வொரு குடிமகனின் வியர்வைக்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.