காந்திநகர்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ளது. தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கொண்டாடும் வகையில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று குஜராத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அப்போது அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் உறுதியான அரசியல் நிலைபாடு, உளவுத்துறையின் துல்லியமான தகவல்கள், இந்திய ராணுவத்தின் செயல்திறன் ஆகியவற்றால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்தது.
பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது, அந்நாட்டு ராணுவத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான தொடர்பை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானின் தீவிரவாதப் பொய்களை அம்பலப்படுத்தியது. பிரம்மோஸ் ஏவுகணைகள் அந்நாட்டின் விமான தளங்களை முடக்கியது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் 100 கி.மீ. ஊடுருவி, 11 முக்கிய விமானத் தளங்களை துல்லியமாக தாக்கியது.
சீனாவிடமிருந்து பெறப்பட்ட பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு அமைப்பு செயல்படாமல் இருந்தபோது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் தீவிரவாத மையங்களையும், விமானத் தளங்களையும் அழித்தன. இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று உலகிற்கு கூறிய பொய்யை உடைத்தோம். இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு வரலாற்றில், ஆபரேஷன் சிந்தூர் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படும்’ என்று கூறினார்.