டெல்லி: ஈரானில் இருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13ம் தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விமானம் இன்று (ஜுன் 19) அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் திரண்டிருந்த பெற்றோர் மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். ஈரானில் இருந்து மீட்கபட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.