புதுடெல்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவானது. தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் கட்டிடத்தின் அடித்தளத்தில் தஞ்சம் அடைந்த சில இந்திய மாணவர்கள் தங்களை உடனடியாக மீட்கும்படி இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஈரானில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு இந்திய மாணவர்களை வெளியேற்ற இந்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையின் கீழ் ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேருந்துகள் மூலமாக இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து அருகில் உள்ள அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது. மாணவர்களை வரவேற்க அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
ஈரானில் இருந்து மீட்கபட்ட 110 மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். டெல்லி வந்த மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் அழைத்து வருவதற்காக சிறப்பு சொகுசு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில்,“எங்களிடம் விமானங்கள் தயாராக உள்ளன. மீண்டும் மற்றொரு விமானம் அனுப்பப்படுகின்றது. துர்க்மெனிஸ்தானில் இருந்து இன்னும் சிலரை நாங்கள் வெளியேற்றி வருகிறோம்.
இந்தியர்களை மீட்பதற்காக மேலும் விமானங்கள் அனுப்பி வைக்கப்படும். துர்க்மெனிஸ்தான் மற்றும் அர்மீனியா
அரசுகளின் ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.