சென்னை: இணைய வழி மோசடிக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ‘ஆபரேஷன் திரைநீக்கு-2’ மூலம் மாநிலம் முழுவதும் 2 நாட்கள் சைபர் க்ரைம் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சைபர் க்ரைம் போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களுக்கு எதிரான ஒரு துரிதமான நடவடிக்கையில் தமிழ்நாடு சைபர் க்ரைம் குற்றப்பிரிவு கடந்த 2024 டிசம்பர் 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் ‘ஆபரேஷன் திரைநீக்கு-1’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 76 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக ‘ஆபரேஷன் திரைநீக்கு-2’ என்ற பெயரில் ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்கள், நகரங்களில் இணை வழி குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய சைபர் க்ரைம் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் விவரங்கள்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் 159 வழக்குகளில் தொடர்புடைய 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் மூலம் 30க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்டு குழு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 125 செல்போன்கள், 304 வங்கி கணக்குகள், 88 காசோலைகள், 107 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 35 கணினிகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.