சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை, எழிலகத்தில் 5.12 கோடி ரூபாய் செலவில் 10,000 சதுர அடி பரப்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்.
விவசாய பெருமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வது, முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகளை வழங்கிட வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளத் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பேரிடர் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், பொது மக்களுக்கு பேரிடர் முன்னெச்சரிக்கை வழங்கும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள், ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு பகுதியில் 2 ரேடார்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதோடு, பல்வகை பேரிடர் முடிவு ஆதார அமைப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இதன் அடிப்படையில் சென்னை, எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மழை, புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஆகியவை குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், பேரிடர் மேலாண்மையின் இதர துறைகளுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறது.
24 மணி நேரமும் செயல்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 10,000 சதுர அடி பரப்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை பார்வையிட்ட முதலமைச்சருக்கு, இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கினார்.